கோவையில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் ; மேலும் இருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது..!!
Author: Babu Lakshmanan15 October 2022, 8:42 am
கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி நிர்வாகி தியாகு என்பவர் கார் மீதும், சுப்புலட்சுமி நகர் பாஜக நிர்வாகி கமலக்கண்ணன் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ஜேசுராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு கடந்த 27ஆம் தேதி முதல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே போல, ஒப்பணக்கார வீதியிலுள்ள மாருதி கலெக்ஷன்ஸ் கடையில் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் உக்கடம் சிட்டி பார்க் வீதியை பாஷா என்பவர் கடந்த 3ஆம் தேதி கைது செய்யபட்டு மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
மத்திய சிறையில் இருக்கும் இருவரையும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாபு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதற்கான நகல்கள் ஜேசுராஜ் மற்றும் பாஷாவிடம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே பாஜக அலுவலகம், பாஜக நிர்வாகியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகிய இருவர் மீது கடந்த 13ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய நான்கு பேர் மீது இதுவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.