சரக்கு வேணும்னா டிரைவரையும் கூட்டிட்டு வா.. மது பிரியர்கள், பார்களுக்கு செக் வைத்த போலீஸ்..!

Author: Vignesh
26 August 2024, 6:09 pm

கோவையில் உள்ள பார்களுக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் டிரைவருடன் தான் செல்ல வேண்டும் என்றும், டிரைவர் இல்லாமல் வருவோர்க்கு பார் நிர்வாகம் டிரைவரை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோவை மாநகர போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது குறித்து ஏற்கனவே கோவை மாநகர காவல் துறையால் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும், பத்திரிக்கை செய்திகளும் வாகன ஓட்டிகளுக்கும். பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.


ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 25 வரை, கடந்த 3 தினங்களில் மட்டும் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல் துறையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில், 126 இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள் உள்ளிட்ட 52 நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக் கூட உரிமையாளர்களுக்கும் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, அதன் வாயிலாக அவர்களது மதுபானக் கூடங்களுக்குச் சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்திய சூழ்நிலையில் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இருப்பினும், மதுபானக் கூட உரிமையாளர்கள் தங்களது மதுபானக் கூடத்திற்கு மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால் அவர் சொந்த டிரைவருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மது அருந்தி உள்ள ஒருவர், சொந்த டிரைவர் இல்லாத சூழ்நிலையில், அவர் பாதுகாப்பாக அவரது வீட்டிற்குச் செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

அல்லது நம்பகத் தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் சம்மந்தப்பட்ட மதுபானக் கூடம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மது அருந்த தங்களது மதுபானக் கூடங்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும் மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டும்.


மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் துறையினருக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மதுபானக் கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டு இருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்குவதைத் தினம்தோறும் கண்காணித்து, பராமரிக்க வேண்டும்.

சி.சி.டி.வி பதிவுகள் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இருப்பில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். காவல் துறையினர் கோரும் பொழுது அது அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும். மேலே கூறி உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மதுபானக் கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக் கூட நிர்வாகத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக் கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும தெரிவிக்கப்படுகிறது.


மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185 ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் இயக்கியமைக்காக முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவோர் மீது ரூ.10,000/வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

இதே தவறை இரண்டாவது முறையாக செய்வோர் மீது ரு.15,000/- வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், இக்குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுபவரது வாகனத்தை முடக்குவதற்கும், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்வதற்கும் மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக் கூடாது என்று காவல் துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.


இவ்வாறு காவல் துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டு உள்ளனர். மாநகர போலீசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. ஆனால், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கும் போலீசார், ஒவ்வொரு பார் வாசல்களிலும் காத்து இருக்கும் பைக்குகள் டிரைவர்களோடு தான் வந்துள்ளனவா என்பதை கண்காணிக்க முடியுமா? டிரைவர்களோடு வந்தால் தான் சரக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று, சரக்கை பிளாக்கில் விற்பனை செய்யும் பார் உரிமையாளர்களுக்கு சொன்னால் எடுபடுமா? இதெல்லாம் நடக்கற விஷயமா? என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • Sivakarthikeyan Dhanush in Party Dance Video சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!
  • Views: - 177

    0

    0