உங்க ஸ்கூல்ல வெடிகுண்டு வெடிக்கப் போகுது : பதறிய ஆசிரியர்கள்.. கோவை தனியார் பள்ளியில் சோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
7 அக்டோபர் 2024, 1:13 மணி
Bomb
Quick Share

கோவையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை வெளியேற்றினர். தொடர்ந்து இதுகுறித்து மாநகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள், பள்ளி நுழைவாயில், வளாகம், வகுப்பறை உள்ளிட்ட ஒவ்வொரு இடங்களிலும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.  இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் பரவியதால் பெற்றோரும் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் 2 நட்சத்திர ஓட்டல்களுக்கு இதே போல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஓட்டலும் அடங்கும். இதற்கு முன்னதாக கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல், புறநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ஆனால் சோதனைக்கு பின்னர் இவை அனைத்தும் வெறும் புரளி என தெரிய வந்தது. ஆனால் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவே போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • EPs CM, அமைச்சர்கள் மட்டும் பாதுகாப்பா பார்த்தாங்க.. மக்களை கண்டுக்கல : வெட்கக்கேடு.. இபிஎஸ் விமர்சனம்!
  • Views: - 51

    0

    0