கோவை PRS மைதானத்தில் திடீர் தீவிபத்து.. போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் எரிந்து சாம்பல் ; போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan24 February 2023, 7:35 pm
கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில் கோவை மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மாலை திடீரென சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெயில் காரணமாக தீப்பற்றி இருக்கக் கூடும் என கூறப்படும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின. வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.