கோவையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயார்… சுமார் 1.14 லட்சம் பேர் எழுத ஆயத்தம்…!!
Author: Babu Lakshmanan7 March 2022, 9:50 pm
கோவை : தமிழகத்தில் நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 25 ந் தேதி முதல் மே 2 ந் தேதி வரை 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ்1 மாணவர்களுக்கு மே 9ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ந் தேதி தொடங்கி 31ந் தேதி வரை நடக்கிறது.
மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் ஜூன் 17ந் தேதியும், பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23-ந் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 7 ந் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 282 மாணவர்கள், 20 ஆயிரத்து 659 மாணவிகள் மொத்தம் 41 ஆயிரத்து 941 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வினை 17 ஆயிரத்து 503 மாணவர்கள், 19 ஆயிரத்து 657 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 160 பேர் எழுத உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வினை 15 ஆயிரத்து 940 மாணவர்கள், 19 ஆயிரத்து 55 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 995 பேர் எழுத உள்ளனர். கோவை மாவட்டத்தில் 10, மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வினை மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 96 பேர் எழுத உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.