விடிய விடிய பெய்த கனமழை ; கோவை ராஜ வாய்க்கால் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு… ஆர்ப்பரித்து பாய்ந்தோடும் வெள்ளம்..!!
Author: Babu Lakshmanan12 November 2022, 9:47 am
கோவை : கோவையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக ராஜ வாய்க்கால் தடுப்பணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் துவங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கோவை மாநகரில் உள்ள 8 குளங்களிலும் நீர் நிறைந்துள்ள நிலையில் நொய்யல் ஆற்று வழியாக செங்குளம் வந்து அங்கிருந்து ராஜ வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கு நீர் செல்லும் தடுப்பணையும் திறந்து விடப்பட்டது.
இதனால் வழக்கமான அளவை விட ராஜா வாய்க்காலில் கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி ராஜவாய்க்காலில் இருந்த குப்பை கூளங்களை அகற்றியதால் இடையூறு இன்றி நீர் வெளியேறி வருகிறது.
வழக்கமாக மழை பெய்தால் ராஜ வாய்க்காலில் நீர் திறந்து விடும் போது, அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்ற நிலையில் தற்போது சீரான முறையில் நீர் வெளியேறி வருகிறது. ராஜவாய்காலில் நீர் திறக்கப்பட்டதால் புட்டுவிக்கி தடுப்பணையிலும் நீர் ஆர்பரித்து ஓடியது.