அந்த ஒரு செகன்ட் தான்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர்தப்பிய போலீஸ் ; கோவையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. காவல் ஆணையர் வெளியிட்ட விளக்கம்!!
Author: Babu Lakshmanan7 March 2023, 11:51 am
கோவை : கோவையில் ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை கரட்டுமேடு பகுதியில் இன்று காலை குற்றவாளி சஞ்சய் தான் பதுக்கி வைத்திருக்கின்ற துப்பாக்கியை எடுத்து தருவதாக கூறி சம்பவ இடத்திற்கு காவலர்களை அழைத்துச் சென்ற போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து காவலர்கள் அவர்களது பாதுகாப்பிற்காக சஞ்சயை சுட்டுப் பிடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்திய போது சஞ்சய் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே தவற விட்டார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.
அப்போது, சஞ்சய் தவறவிட்ட துப்பாக்கி சம்பவ இடத்தில் கிடந்ததை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இது குறித்து துணை காவல் ஆணையர் சந்தீஸ் கூறியதாவது :- தற்போது கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கி நாட்டு வகை கைத்துப்பாக்கியை சேர்ந்தது. அந்த துப்பாக்கி ஏற்கனவே தயார் (Loaded) நிலையில் இருந்தது. மேலும், சஞ்சய் காவலர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய போது இதயப் பகுதியில் குறி வைத்துள்ளார். காவலர்கள் மீது குண்டுப் பட்டிருந்தால் உயிர் பறிப்போயிருக்கக்கூடும்.
இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சஞ்சய் மீது கொலை வழக்குகள் இல்லை. பல்வேறு திருட்டு வழக்குகள், கட்டபஞ்சாயத்து போன்ற வழக்குகள் உள்ளன. சஞ்சயிடம் விசாரணை மேற்கொள்ளும் போது பீகார், ஒரிசா போன்ற பகுதிகளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை வைத்து மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார், எனக் கூறினார்.