ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனை மீறல்.. கோவை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan17 April 2023, 11:37 am
கோவை ; ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக RSS நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து, தேர்நிலைத்திடல் வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்தவும், கூட்டம் நடத்தவும் வெரைட்டிஹால் ரோடு காவல்நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.
அப்போது நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி மற்றும் கூட்டம் நடத்திட போலீசார் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், நேற்று நடந்த பேரணியில் நீதிமன்றம் நிபந்தனைகளை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலம்பாட்டம் நடத்தியதாக ஆர்எஸ்எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார், ரிலேசன் ஆபிசர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது வெரைட்டிஹால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.