போதையில் நடுரோட்டில் பள்ளி வாகனத்தை நிறுத்தி உறக்கம்… ஓட்டுநர் அலப்பறை… கொந்தளிக்கும் பெற்றோர்..!!
Author: Babu Lakshmanan9 September 2023, 9:38 am
கோவையில் மதுபோதையில் பள்ளி வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி உறங்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவைபுதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் சிலர் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்று, பின்னர் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் செல்வார்கள். அதேபோல, ஒரு சில குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியின் வாகனத்தில் அனுப்பி வைப்பார்கள்.
அதன் அடிப்படையில், கோவை புதூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அப்பள்ளியின் காண்ட்ராக்ட் வாகனங்கள் சென்று குழந்தைகளை ஏற்றி வரும் நிலையில், வடவள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம், குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் நின்றது. அப்போது, சென்று பார்த்த பொழுது அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் உறங்கி கொண்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த பொழுது, அந்த ஓட்டுனரின் பெயர் செந்தில் என்பதும் அவர் தலைக்கேறிய மது போதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் தத்தளித்து ஸ்டேரிங் மேலே உறங்கியது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு 12 குழந்தைகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மது போதையில் வாகனத்தை ஓட்டி அலட்சியப்படுத்திய ஓட்டுனர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, ஓட்டுநரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.