எனது கனவு நிறைவேறியது : உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவன் நெகிழ்ச்சி… விரைவில் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2022, 1:14 pm
கோவை : உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவைமாணவன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
துடியலூர் அடுத்த சுப்பிரமணியன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ், ரோகித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாய்நிகேஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பல்வேறு முறை இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார்.
ஆனால் உயரம் பற்றாக்குறையால் ராணுவத்தில் தேர்வாகவில்லை. இதனால், உக்ரைன் நாட்டில் விமானவியல் படித்து வந்தார். இதனிடையே உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூழ்ந்தது.
உக்ரைனிலுள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய நிகேஷ் உக்ரைன் துணை ராணுவ படையில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று வருகிறார்.
உக்ரைன் ராணுவத்தில் இணைந்த சாய் நிகேஷ் இந்தத் தகவலை ஒன்றிய உளவுத்துறை மற்றும் தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து அவரது பெற்றோர் ரவிச்சந்திரன், ஜான்சி லட்சுமி கூறுகையில், “நாங்கள் சாய்நிகேஷை தொடர்பு கொண்டு பேசியபோது, ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டதாகவும், போர் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் தொடர்ந்து பேச இயலாது என்றும் கூறியதாக தெரிவித்தனர்.
இந்த சூழலில் சாய்நிகேஷின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில் “அண்மையில் சாய்நிகேஷை தொடர்புகொண்டு பேசினேன். அவர் தாய் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொண்டு பொறுமை காக்குமாறும். அவரை நாடு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்” என்றார்