கோவிலுக்கு அருகே டாஸ்மாக் கடை… அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் : இந்து முன்னணியினர் எச்சரிக்கை
Author: Babu Lakshmanan24 March 2022, 12:40 pm
கோவை: கோவையில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் சதீஷ் கூறியதாவது :- அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியில் டாஸ்மாக் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து டாஸ்மாக் மதுக்கடையை அமைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிவன் கோயிலும் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது.
முன்னதாக சின்னியம்பாளையம் ஆரம்பப் பள்ளிக்கு முன்பு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் பலத்த எதிர்ப்பால் மூடப்பட்டது. இப்போது அதே கடை கோவிலுக்கு எதிரே வருவது வேதனை அளிக்கிறது. எனவே இதனை கைவிட வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களை முன்னெடுப்போம், இவ்வாறு அவர் கூறினார்.