இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல்: கோவை TO இலங்கை விமான சேவை ஒத்திவைப்பு..!!
Author: Rajesh26 April 2022, 9:03 am
கோவை இலங்கை இடையே நடப்பு மாதம் துவங்க இருந்த விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தொற்று குறைந்த நிலையில் கோவையில் இருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டது. அதேபோல், இலங்கைக்கும் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது,
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இருந்தாலும் இலங்கையில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. கோவை – இலங்கை இடையே இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டுப் ஏப்ரல் மாதம் துவங்கப்படுவதாக இருந்த விமான சேவை, அக்டோபார் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் அங்கு நிலவும் சூழலை பொறுத்தே மீண்டும் விமான சேவை துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், கோவையில் இருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.