குடியிருப்புகளுக்குள் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை… வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி..!!
Author: Babu Lakshmanan13 June 2022, 10:25 am
கோவை அருகே வழி தவறி குடியுருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
கோவையை அடுத்த பேரூர் தீத்தி பாளையம் கிராமத்தில் குடடைதோட்டம் அருகில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான பூமியில், நேற்று இரவு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து பயிர்களை சேதம் செய்தது. பின்னர், அவர் தங்கியிருந்த வீட்டு கதகளை உடைத்து திண்பண்டங்களையும், பாத்திரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத்துறை அலுவலர்கள் வரும் முன்பாகவே யானைகள் அங்கிருந்து சென்று விட்டன.
இந்த நிலையில், இரவு முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 யானைகள் அதிகாலையில் காளம்பாளையம் பகுதியிலிருந்து மலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு யானை வழிதவறி வேளாங்கண்ணி குடியிருப்பு பகுதியில் நின்றுவிட்டது.
மற்ற ஐந்து யானைகள் வனப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில், ஒரு யானை மலைப் பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் அலைந்து வருவதாகவும்,குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் சுற்றி திரியும் யானையை வனத்திற்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.