‘அக்கா, வெளியே வராதீங்க..’… ஊருக்குள் வலம் வந்த ஒற்றை காட்டு யானை ; பீதியில் பொதுமக்கள்…!!
Author: Babu Lakshmanan1 July 2023, 4:18 pm
கோவை ; கோவை அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை வலம் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்தி சில சமயங்களில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் நாள்தோறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு தடாகம் சாலை திருவள்ளுவர் நகரின் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒருவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முற்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடைய, வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்தன.
இதனிடையே, அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனை அங்கிருந்தவர்கள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்பொழுது, இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.