மின்நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் ; சாமர்த்தியமாக செயல்பட்டு யானைகளின் உயிரை காப்பாற்றிய மின் ஊழியர்கள்..!!
Author: Babu Lakshmanan12 November 2022, 11:56 am
கோவையில் மின் நிலையத்திற்குள் காட்டு யானைகள் புகுந்த நிலையில், மின்சாரத்தை நிறுத்தி யானைகளின் உயிரை ஊழியர்கள் காப்பாற்றியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது. கேரள வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப் பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். தற்போது, யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால், கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தடாகம், மருதமலை வனப் பகுதிக்குள்
வந்துள்ளன.
இந்த நிலையில், சம்பவத்தன்று மருதமலை வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கூட்டம் வனப் பகுதியில் இருந்து வெளியேறி, மின் நிலையத்திற்குள் புகுந்தன. அதில் 6 யானைகள் கோவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர், அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் திடீரென அருகே இருந்த துணை மின் நிலையத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தன.
யானைகள் உள்ளே வருவதை கண்ட லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் மின் இணைப்பை துண்டிக்குமாறு அறிவுறுத்தவே, உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் ஊழியர்கள் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானைகளை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர். மின்சார வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 6 யானைகளின் உயிரை காப்பாற்றப்பட்டதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.