வட்டார கல்வி அலுவலகத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்களிடம் பணம் வசூல் ; கட்டு பணத்தை எண்ணும் இளநிலை உதவியாளர்… வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan4 April 2023, 9:35 pm
ஒசூர் அருகே வட்டார கல்வி அலுவலகத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் மொத்தம் 158 அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 650க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு மட்டும் கழிவறை உள்ளது. அங்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் பயன்பாட்டிற்கு கழிவறை இல்லாததால் கழிவறை தேவை எனக்கூறி 158 அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளிடமும் தலா 500 ரூபாய் என சுமார் 3 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து வட்டார கல்வி அலுவலகத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிவறை கட்டுவதற்காக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஆசிரிய, ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ்., பைல் செய்ய வேண்டிய வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் தனி ஆடிட்டர் மூலம் டி.டி.எஸ் பைல் செய்வதாக கூறி ஆசிரியர்களிடம் 250 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆகியோருக்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண தேஜஸ் என்பவர் ஊழியர்கள் மூலம் ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்தது தெரிய வந்தது. ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் நேரடியாக புகார் அளிக்காததால் பிரச்சனை அத்துடன் முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் ஒருவர் பணத்தை கட்டாக வைத்து எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் நடந்து ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது வீடியோ வெளியாகி இருப்பது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.