கோவையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைகிறது…ஆனால் அலட்சியம் கூடாது: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!!
Author: Rajesh24 January 2022, 1:46 pm
கோவை: கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சமரன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கோவையில் ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவத்துறை சார்பாக கொரோனாவுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் பிரிவு கோவை அரசு பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் துவக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு சில நாட்களாக தொற்றின் விகிதம் லேசாக குறைந்தாலும் கூட பொது மக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கோவையில் தற்போது 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஆக்ஸிஜன் செரிவூட்டி தேவைப்படுவோர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகைகள் தயார் நிலையில் உள்ள நிலையில், 11 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் 97.6 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 82 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 43 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியுடையவர்களாக உள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேர தடுப்பூசி முகாம்கள் இ.எஸ் ஐ மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது அலை தாக்கத்தின் போது அதனை கட்டுப்படுத்த கோவை மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதேபோல் இந்த முறையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தொழிலகங்களில் முகக் கவசம் இல்லாத பணியாளர்கள் வரக்கூடாது என்று அறிவித்து உள்ளோம். விதிகளை மீறும் தொழிலகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் கோவையில் எளிமையாக குடியரசு தினம் கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.