ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்… ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ஆட்சியர் ஆய்வு…
Author: kavin kumar24 January 2022, 8:02 pm
தருமபுரி : ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுபடுகையில் ஆய்வு செய்தார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியாக 1928.80 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் ஏற்கனவே முடிவுற்று, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்ட மக்களுக்கு தடையின்றி காவிரிக் குடிநீர் கிடைத்திடவும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கிட இதற்கான அறிக்கை தயாரிக்கும் பணிகள் உள்ளிட்ட இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஒகேனக்கல்லில்மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கான தலைமை நீரேற்று நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டி, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேவையான இடம் தேர்வு செய்வது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.