கேலி, கிண்டல் செய்த தோழிகள்… விரக்தியில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி ; அவசரம் காட்டிய கல்லூரி நிர்வாகம்.. எழுந்த சந்தேகம்!!
Author: Babu Lakshmanan27 February 2023, 1:12 pm
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய பட்டி சேர்ந்த கன்னியப்பன் – பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் கார்த்திகா ஜோதி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு, விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் இவருடன் மூன்று மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நண்பராக பழகி வந்த நிலையில், கல்லூரி விடுதியில் நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையில் கார்த்திகா கல்லூரி நிர்வாகத்திடம் சக தோழிகள் தன்னை கேலி செய்வதாக புகார் அளித்ததாகவும், இதனைத் தொடர்ந்து ஒரே அறையில் தங்கி இருந்த நான்கு மாணவிகளையும் வெவ்வேறு அறைக்கு கல்லூரி நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து, மீண்டும் அந்த தோழிகள் இவரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவி கார்த்திகா கல்லூரி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, கல்லூரி நிர்வாகிகள் உதவியுடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தா நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனை பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல் உடலை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு போலீசார் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுவரப்பட்ட மாணவியரின் உடலை திண்டுக்கல் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மகளிர் அமைப்பினர் சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும், கோட்டாட்சியர் மகளிர் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் புகாரை ஏற்றுக் கொண்டு கோட்டாட்சியர் தலைமையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற பின்பு மாணவியின் கார்த்திகா ஜோதியின் உடலை பெற்றோர்களும் ஒப்படைக்கப்பட்டு, உடலுக்கான இறுதி சடங்குகளை செய்வதற்காக ஒட்டன்சத்திரம் மயானத்திற்கு உடலை மாணவியின் உறவினர்கள் வாங்கிச் சென்றனர். மேலும் திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்