போதை மாத்திரை சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு… சக மாணவிகளின் கெட்ட பழக்கத்தினால் பறிபோன உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
25 June 2022, 1:58 pm

சென்னையில் 2ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டதாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் மற்றும் கொலை, கொள்ளை என குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போதை கலாச்சாரம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து சட்டவிரோத கும்பல் அரங்கேற்றம் செய்து வருகிறது.

எனவே, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை கஞ்சா 2.0 என்னும் திட்டத்தை செயல்படுத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், மாணவர்களிடம் இருந்து போதைப் பொருள் புழக்கத்தை நீக்க முடியாத நிலையே உள்ளது.

இந்த நிலையில், சென்னை குயின்‌ மேரிஸ்‌ கல்லூரியில்‌ படித்து வந்த பிகாம்‌ இரண்டாம்‌ ஆண்டு மாணவி ரூத்பிரின்சி போதை மாத்துரை உட்கொண்டு இறந்து விட்டதாக
அவரது பெற்றோர்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ தெரிவித்துள்ளனர்‌.

அண்ணாநகர் மேற்கு சாலையில் உள்ள உதயம் காலனியைச் சேர்ந்தவர் சாம்யுவராஜ் என்பவரின் மகள் ரூத்பிரின்சி குயின் மேரிஸ் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 8ம் தேதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு, மீண்டும் மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த 9ம் தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 22ம் தேதி உயிரிழந்தார்.

சிகிச்சை பெறுவதற்கு முன்பாக, கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் இருந்து போதை மாத்திரை தனக்கு கிடைத்ததாகவும், அதனை சாப்பிட்ட பிறகே இதுபோன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் மாணவி ரூத்பிரின்சி தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,‌ அவரது உள்ளுறுப்புகளின்‌ இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள்‌ நிலுவையில்‌ உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தனது மகளின் இறப்பு குறித்து சாம்யுவராஜ்‌ முதல்வர்‌ தனி பிரிவு,
காவல்‌ நிலையம்‌ என அனைத்து இடங்களிலும்‌ புகார்‌ ஒன்றை செய்துள்ளார்‌. அதில், மாணவி ரூத்பிரின்சி போதை மாத்துரை உட்கொண்டு இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம்‌ கேட்டபோது, என்‌ கவனத்திற்கு வந்த உடனே துறை ரீதியாக அறிக்கை கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கல்லூரியில்
போதை மாத்திரையை யாரும்‌ பயன்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 697

    0

    0