ரூ.2 கோடி சொத்துக்களை அபரிக்க முயற்சி.. அலர்ட்டான நிலத்துக்கு சொந்தக்காரர்.. வசமாக சிக்கிய கல்லூரி பேராசிரியர்!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 4:20 pm

திருவண்ணாமலை : செங்கம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு பகுதியில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணி என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் உள்ளது. காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணி புரியும் ரவி என்பவர் தொழிலதிபர் மணியிடம் 12 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்க்கு பேரம் பேசியுள்ளார்.

இதற்கு மணி தன் நிலத்தை விற்பதற்கு எந்தவிதமான சாத்தியக் கூறுகளும் இல்லை என ரவியை திருப்பி அனுப்பியுள்ளார். பேரம் பேசிய சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தொழிலதிபர் மணியிடம் 2 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு, அதில் 50 லட்ச ரூபாய் முன்பணமாக வழங்கியுள்ளதாக அப்பகுதி மக்களை நம்பவைத்துள்ளார். மேலும், அனுமதியின்றி 12 ஏக்கர் நிலத்தில் உள்ள மரம் செடிகளை அப்புறப்படுத்தியும், மணி தன் நிலத்தின் பாதுகாப்புக்காக போடப்பட்ட கம்பி வேலிகளை உடைத்தெறிந்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார்.

இச்சம்பவம் பற்றி அறிந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணி உடனடியாக விரைந்து வந்து தன் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேலைகளை செய்து வரும் மூன்று ஜேசிபி வாகனங்களை தடுத்து நிறுத்தினார். பின்னர், இச்சம்பவம் குறித்து புதுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் ரவியை அழைத்து காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது 20 ரூபாய் பத்திரத்தில் 50 லட்சம் ரூபாய் தொழிலதிபர் மணியிடம் முன்பணமாக தந்துள்ளது போல் போலி ஆவணங்களை தயார் செய்து வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர் ரவி மீது 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இதற்கு முன்பு புதுப்பாளையம் காவல் நிலையத்தில் ரவியின் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு என ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!