பிரசவத்திற்காக விடுப்பு எடுத்த கல்லூரி மாணவி… தேர்வு எழுத மறுத்த நிர்வாகம்.. கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம்!
Author: Babu Lakshmanan6 June 2022, 6:26 pm
பிரசவத்திற்கு விடுப்பு எடுத்த காரணத்தினால், தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இளம்பெண் கைக்குழந்தையுடன் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோளிங்கர் அடுத்த ஆயிலம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் காமாட்சி. வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களாக பிரசவ விடுப்பில் இருந்த காமாட்சி, குழந்தை பெற்ற பின் மீண்டும் கல்லூரிக்கு திரும்பியுள்ளார்.
அப்போது கல்லூரி நிர்வாகம், நீண்ட விடுப்பு எடுத்ததால் தேர்வு எழுத முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காமாட்சி, தனது கைக்குழந்தையுடன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.