முதலமைச்சரின் சொந்த ஊரில் இந்த கதியா..? கல்லூரி மாணவர்கள் ஆவேசம்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம்..!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 4:16 pm

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த கல்லூரிக்கு கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் என்கிற பகுதியில் இடம் பார்க்கப்பட்டு, வருகின்ற 30ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. இதற்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், நன்னிலம் தொகுதிக்கு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட இந்த கல்லூரி குடவாசல் ஒன்றியத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் எனவும், செல்லூரில் இந்த கல்லூரி கட்டிடம் கட்டப்படவிருப்பதால் தங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி போன்றவை இல்லை எனவும் கூறி, அந்த கல்லூரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், திருவாரூர் விளமல் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தனர்.

இதன் காரணமாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மாணவர்களை உள்ளே விடாமல் தடுத்ததால் ஆவேசம் அடைந்த மாணவர்கள், ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி கன்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கு மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்களை சந்தித்து உரிய விளக்கம் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி அங்கே அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் தங்களது கோரிக்கைகளை உரிய முறையில் மனுவாக எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும் அதற்கு இரண்டு நாட்களில் உரிய பதில் அளிப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் நிலையில், இந்தப் போராட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த காரணத்தினால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற் கதவுகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 554

    0

    0