கடன் தவணை செலுத்தாததால் உடமைகள் பறிப்பு : விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுநல அமைப்புகள்…
Author: kavin kumar1 February 2022, 2:02 pm
திருச்சி : திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால், நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று திருச்சி நீதிமன்றம் வாயிலுக்கு முன்னதாக நடுரோட்டில் ஒருவர் திடீரென பெட்ரோல்ல ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவர்மீது பரவிய தீயை அணைக்க மணல் எடுத்து வீசினர். உடல் பாதி எரிந்த நிலையில் அவரை பார்த்து பொதுமக்கள் அவரை திட்டினர். அதற்கிடையே கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பினர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சேகரன் (58) என்பது தெரியவந்தது. இவர் திருச்சி – பழைய தஞ்சாவூர் ரோடு பகுதியில் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
இவர் பஜாஜ் நிறுவனத்தில் கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் வீடு கட்டுவதற்காக 7 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். மாதம் ரூ.20,810 தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தவணை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டிற்க்கு வந்து மிரட்டியும், தகாத வார்த்தையில் திட்டியும் உள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் கொடுத்துள்ளார் சேகரன். ஆனால் பலனேதும் இல்லாததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
80 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சேகரன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டலால் பலர் பலியாகி வருவதை கண்டித்து பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் திருச்சி தில்லைநகரில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் அலுவலத்திற்கு உள்ள நுழைய முயன்ற போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் அலுவலகத்தின் வாசல் படியில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை போராட்டக்காரர்கள் பேசுகையில், “தொடர்ந்து பஜாஜ் பைனான்ஸ் போல சிறு நிதி நிறுவனங்கள் தொலைபேசி மூலம் கடன் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அப்படி பணம் கேட்டு பெற்றுக் கொண்டவர்களை ஒரு மாதம் கட்ட தவறினால் அந்த வீட்டுக்குச் சென்று ஆபாசமாக பேசி வருகின்றனர். அதேபோல நேற்று தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சேகரும் பஜாஜ் பைனான்ஸ் கடன் வாங்கியிருந்தார். அவரது கடைக்கு சென்ற ஊழியர்கள் அவரை அவமானப் படுத்தியும், அவரது பரிசையும் வாகனத்தையும் பிடிங்கி வந்து உள்ளனர்.
தொடர்ந்து சேகர் அலுவலத்திற்கு சென்று வாகனத்தையும், பரிசையும் கேட்டபோது அவமானப்படுத்திய காரணத்தினால் நேற்று திருச்சி நீதிமன்றம் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். பஜாஜ் நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.