குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு : ஹெக்டேருக்கு எவ்வளவு? வெளியான அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2023, 8:59 pm
காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு சுமார் 3,0000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் ரூ,13,500 வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.