சத்து மாத்திரை சாப்பிடுவதில் மாணவிகளுக்குள் போட்டி… 3 நாட்களாக சிகிச்சை அளித்தும் நேர்ந்த சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2023, 9:41 pm
போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரைகளை உட்கொண்ட நான்கு மாணவிகளில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி திங்கட்கிழமை நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உதகை நகராட்சிக்கு சொந்தமான உருது பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை கொண்டதில் நான்கு பேரும் மயக்கம் அடைந்தனர்.
அவர்களுக்கு ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேற்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
நால்வரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில் அதில் மூன்று மாணவிகளின் உடல்நிலை சீராகி வந்துள்ளது. ஆனால் சைஃபா பாத்திமா(13) என்ற ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் மோசமாகி கொண்டே சென்றதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை மாணவியை அழைத்து போது சேலம் அருகே மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சேலம் குமாராப்பாளையம் அரசு மருத்துக்கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்த விசாரணையின் அடிப்படையில் முதல் கட்டமாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மாணவிக்கு கல்லீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.