சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர்.. சிறுமியால் வெளியான தகவல்!
Author: Hariharasudhan30 December 2024, 6:48 pm
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், “எனக்கு 18 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நான் வீட்டு வேலை செய்கிறேன்.
தற்போது என்னுடைய மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க என் மகனைக் கடைக்கு அனுப்புவது வழக்கம். சம்பவத்தன்றும் என்னுடைய மகன், பொருள்களை வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், என்னுடைய மகனை அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பின்னர், எனது மகனிடம் அவர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதனால் அழுதுகொண்டே என் மகன் வீட்டுக்கு வந்து, என் மகளிடம் விவரத்தைக் கூறியுள்ளான். என் மகள் மூலம் இந்தத் தகவல் எனக்குத் தெரியவந்தது. எனவே, எனது மகனிடம் தவறாக நடந்து கொண்ட அந்த ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் ஆளுநரைச் சந்தித்ததில் இவ்வளவு அரசியலா? தவெகவின் இந்த பாய்ச்சல் எப்படி?
இதன் பேரில், புளியந்தோப்பு போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அப்போது அவர் மது போதையில் இருந்ததால் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. பின்னர், போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப் போவதாக புளியந்தோப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.