பேச பேச எழுந்து சென்ற பொதுமக்கள்… காலியான இருக்கைகள் முன்பு காங்., எம்பி ஜோதிமணி பேச்சு ; அரசு நிகழ்ச்சியில் நடந்த சோகம்..!!
Author: Babu Lakshmanan21 November 2023, 9:52 am
கரூரில் கூட்டுறவுத்துறை வார விழாவையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், பொதுமக்கள் எழுந்து சென்றதால், காலியான சேர்களின் முன்பு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உரையாற்றி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் கூட்டுறவு துறை 70ஆம் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயம், அரசு நலத்திட்ட உதவி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பயனாளிகள் குறைந்த அளவு இருந்த காரணத்தினால் பலர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களை அழைத்து வந்தனர்.
அப்போது, அவர்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டுறவு துறை திட்டங்கள் குறித்து பேச தொடங்கினார்கள். அவர்களின் பேச்சை கேட்க மறுத்த பொதுமக்கள், இருக்கையை விட்டு வெளியே சென்றதால், இருக்கைகளில் பலர் இல்லாமல் வெறும் இருக்கை முன்பு எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேசினர்.
மேலும், சிலர் டீ குடிக்க செல்வதாக கூறி விட்டு, பலர் சொந்த ஊருக்கு வேன்களில் ஏறி வெளியே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலியான இருக்கைகள் முன்பு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.