பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து விவகாரம் ; தமிழக அரசு மீது காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அதிருப்தி…!!
Author: Babu Lakshmanan23 January 2024, 8:35 pm
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்தது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் கூறியதாவது :- அயோத்தி ராமர் கோயிலில் கூடிய கூட்டத்தை விட, தை பூசத்திற்கு பழநியில் அதிக கூட்டம் கூடும். இது வட மாநிலத்தவர்களுக்கு தெரியாது. தமிழகத்தையும், தமிழக அரசியலையும் புரிந்து கொள்ளாதவர்கள், அயோத்தி ராமர் கோயிலால் தமிழகத்தில் பலன் கிடைக்கும் என அரசியல் கணக்கு போடுகின்றனர்.
வட இந்தியர்களுக்கு தேவையானவற்றை பாஜக செய்கிறது. ஆதலால் வட இந்தியாவில் பாஜகவிற்கு அதரவு பெற்றுள்ளது. தமிழகத்தை விட சிறப்பான கோவில்கள் வடநாட்டில் இல்லை. உலகத்திலேயே அதிக கோயில் உள்ளது. தமிழகத்தில் தான். தமிழக கோயில்களை பிரபலப்படுத்தி, அதன் மூலம் கோயில் சுற்றுலா வளர்ச்சி அடைவதை வரவேற்கிறேன். ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் நடைபெறுவதால் அதற்கு உரிய சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்.
திமுக மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதை இளைஞர் அணி மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் தனது பலத்தை காட்ட வேண்டும். இலங்கை இந்தியா கடல் வழி பாதை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைய வேண்டும். இலங்கை கடற்படையால்,தமிழக மீனவர் சிறை பிடிப்பதை தடுத்து நிறுத்த மத்திய அரசு 10 ஆண்டுகளாக நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கவில்லை.
காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எனக்கு எந்த ஒரு நோட்டீஸும் அனுப்பவில்லை. கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்தது வருத்தமளிக்கிறது. இது போன்ற அதிகாரிகள் காவல்துறையில் இருக்கக் கூடாது. இந்திய அளவில் தமிழக காவல் நிலையத்தில் தான் அதிக சித்தரவதைகள் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசு குறைக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.
0
0