ஆவினை அழிக்க பாஜக சதி.. கவர்னர் மாளிகையை காலி செய்துவிட்டு கமலாலயம் செல்லலாம் ; ஆளுநருக்கு காங்கிரஸ் அட்வைஸ்!!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 2:35 pm

விருதுநகர் ; கவர்னர் மாளிகையை காலி செய்து விட்டு மிக விரைவில் கமலாலயம் சென்று ஆளுநர் அலுவலகமாக மாற்றுவார் என்று விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அனைத்து நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது :- விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைகளை மாவட்டம் சார்பாக வருவாய் துறை அமைச்சர் கே.கேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய இரு அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் வெகு விரைவில் நடத்தி சரி செய்யப்படும். ஆளுநர் ரவி அவர்கள் மோடி அவர்களின் வெளிநாட்டு பயணத்தை பற்றி சொல்கிறார். தமிழக முதல்வரின் சுற்றுப்பயணத்தை பற்றி பேசவில்லை.

பிரதமர் மோடி அவர்களை குற்றம்சாட்டுவதாக தான் நான் நினைக்கிறேன். மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரோ நாடோ இல்லை. மோடி அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து எதைப் பெற்றுவந்தார் என்பதை ஆளுநர் ரவி கேட்கிறார் என்ற ஐயம்தான் எழுகிறது. மேலும், ஆளுநர் ரவி அவர்கள் தமிழகத்தில் ஆளுநர் பணியை செய்வதை விட்டு விட்டு பாஜகவின் மாநில தலைவர் பணியை செய்வது போல் தெரிகிறது.

எனவே, அவர் கவர்னர் மாளிகையை விரைவில் காலி செய்து விட்டு கமலாலயம் சென்று ஆளுநர் அலுவலகமாக மாற்றுவார் என்ற அறிகுறி தெரிகிறது. இப்படிப்பட்ட ஆளுநரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறது அருநரின் செயல்பாடுகள், என குற்றச்சாட்டினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உள்ள நிலை குறித்த கேள்விக்கு, யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கத்தக்கது. மேலும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆவின் சீர்கேடு என்பது கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல சீர்கேடுகள் நடந்துள்ளது. அதனை சரி செய்ய அமைச்சர்களுக்கு கால அவகாசம் தேவை. ஆவின் பால் நிலையங்களை காலி செய்து விட்டு, குஜராத் மாநிலத்தின் அமுல் பாலை கொண்டு வருவதற்கான சதிவேலையை பாஜக செய்கிறது. குறிப்பாக ஆவின் பாலை வேறருக்கும் சதி வேலையை அமித்ஷா செய்து வருகிறார்.

மேலும் அதிமுக என்பது அழிந்துவரும் கட்சி. பாஜகவின் அடிமைகளாக தொடர்கிறார்கள். கரைந்துவரும் கப்பலாகவும், உடைந்த மண் பாத்திரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. மேலும், அதிமுகவின் இறுதி காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி சிந்தித்து பேசாமல் மற்றவர்களைப் பற்றி பேசுவதை ராஜன்செல்லப்பா தவிர்க்க வேண்டும், என்றும் பேட்டியின்போது தெரிவித்தார்

மேலும் இந்த நிகழ்வின்போது சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 442

    0

    0