அண்ணாமலை நடந்தால் ஒன்னும் ஆகப்போவதில்லை… நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இது தான் நடக்கும் ; அடித்து சொல்லும் திருச்சி எம்பி ..!!!
Author: Babu Lakshmanan11 July 2023, 1:53 pm
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடை பயணத்திற்கும் ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதாக திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியிலிருந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த நிலை மற்றும் கூடுதல் நிதி தேவைப்படும் பணிகள் ஆகியவை குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது:- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடைபயணத்திற்கும், ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. அண்ணாமலை 10 கிலோமீட்டர் நடந்தால் என்ன அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது.
நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கப்படுகிறது. இப்போது எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்வார்கள். தமிழக ஆளுநர் தமிழக அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் என்பதை தெளிவாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக அரசு தற்போது குடும்ப பெண்களுக்கு வழங்க உள்ள உரிமை தொகை, நிதி நெருக்டி காரணமாக தான், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதி உள்ள ஏழை பயனாளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு அனைவருக்கும் வழங்க வாய்ப்புள்ளது. கொரோனா காலகட்டத்தில் பத்து கோடி ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து தராததால், தொகுதிகளில் மக்கள் களப்பணிகள் செய்ய முடியவில்லை. தற்போது மக்களை சென்று சந்திக்கும் போது, எதுவுமே செய்யவில்லை என்று குறை கூறுகின்றனர்.
இந்த வருட பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதியை இதுவரை வரவில்லை. உடனடியாக மத்திய அரசு இந்த வருட நிதியை விடுவிக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பாக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். பொம்மை வழக்கிற்கு பின்பாக எந்த ஒரு மாநில அரசையும் நேரடியாக மத்திய அரசு கலைக்க முடியாது. ஆனால் அந்த ஆட்சி இல்லாமல் போவதற்கு கட்சியை உடைப்பது, எம்எல்ஏ வை விலக்கி வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அரசை செயல்பட விடாமல் முடக்கும் செயலையும் மத்திய அரசு செயல்படுகிறது. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை தமிழகம் சந்தித்தாலும், ஆட்சி கலைந்தாலும் பரவாயில்லை. பாஜகவிற்கு எதிராக அடுத்த தேர்தலில் யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் பணியில் பின் வாங்க மாட்டோம் என்ற ரீதியில் தான் முதல்வர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான், தற்போது இதனை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமராக ஏற்றுக்கொள்வார்கள், எனக் கூறினார்.