‘பலாத்காரம் செய்து கொன்று விடுவோம்’… பட்டதாரி பெண்ணை மிரட்டிய காங்கிரஸ் கவுன்சிலர் ; தந்தையுடன் வந்து ஆட்சியரிடம் புகார்..!!
Author: Babu Lakshmanan18 July 2023, 3:57 pm
கன்னியாகுமரி அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டி துன்புறுத்தியும், பலாத்காரம் செய்து விடுவேன் என காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகேயுள்ள மேக்காமண்டபம், பூச்சிகாட்டு விளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி நிக்சன். இவரது மகள் அபின்சிலா மேரி (22). இவர் நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை சந்தித்து இன்று மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் எம்பிஏ படித்து இருக்கிறேன். அப்பா கூலி வேலை செய்து வருகிறார். எனது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். எனது வீட்டில் அருகில் உள்ள அப்பாவுக்கு உரிமை பெற்ற சொத்தை எனது அம்மா மருத்துவ பார்த்த செலவின கடன் பிரச்சினை காரணமாக இரண்டு சென்ட் நிலத்தை ஞான ஜெபின் (விலவூர் பஞ்சாயத்து துணைத்தலைவர், காங்கிரஸ் கட்சி) என்பவருக்கு ஒன்பது லட்சம் ரூபாய் 48% கந்து வட்டிக்கு வாங்கி வாங்கினார்.
மேற்படி பணத்திற்கு மாத வட்டியாக ரூபாய் 36,000 தவறாமல் கொடுத்து வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி எனது அப்பா, ஞான ஜெபினிடம் அசல் தொகையை திரும்பத் தருகிறேன். எனது சொத்தை திரும்ப எழுதி தாருங்கள் என்று கேட்டதற்கு, ஞான ஜெபின் மேற்படி பணத்திற்கு கந்துவட்டியாக 2 லட்சம் ரூபாய் அதிகமாக கேட்டு பணத்தை தந்தால் தான் எழுதித் தருவேன் என்று மிரட்டினார்.
எனது அப்பாவும் அவர் கேட்ட இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி மேற்படி சொத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்டார். ஆனால் சொத்தை கேட்டால் உன் மகளை சீரழித்து விடுவேன். உன் மகளை பலாத்காரம் செய்து கொன்று விடுவேன் என்று தொடர்ந்து அவர் மிரட்டினார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசி வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று என்னை மிரட்டினார்.
அதன் பின் 16 ஆம் தேதி மீண்டும் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஞான செபின் மற்றும் ஜோஸ் ஆகியோர் சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்தால், “நீ காலேஜுக்கு போகும்போது உன்னை தூக்கிப் போய் கூட்டாக பலாத்காரம் செய்து கொன்று விடுவோம்,” என்று மிரட்டினார்கள். இது தொடர்பாக கொற்றிக்கோடு மற்றும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி நபர்களால் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் , இவ்வாறு அதில் தெரிவித்தார்.