கிருஷ்ணா கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி… மினி வேனுக்கு வழி விட முயன்ற போது நிகழ்ந்த விபத்து..!!
Author: Babu Lakshmanan27 September 2022, 10:11 am
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி ஒன்று கிருஷ்ணா கால்வாயில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் பெல்லாரி நோக்கி மென்பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, திடீரென கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தலைக்குப்பறாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவரிடம் நடத்திய விசாரணையில், எதிரே வந்த மினி வேன் செல்ல வழி விட்டபோது, எதிர்பாராத விதமாக கிருஷ்ணா கால்வாயில் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
இதனிடையே, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் லாரிகளை பார்த்து செல்ல வாகனத்தை சாலையில் நிறுத்தவதால், அப்பகுதியில் மேலும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காவல்துறை உடனடியாக கால்வாயில் இருந்து லாரியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.