திம்பம் அருகே பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து : நூலிழையில் உயிர் தப்பிய லாரி ஓட்டுநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 2:00 pm

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவில் உள்ள பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இம்மலைப்பாதையில் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு கோழி தீவன மூலப்பொருட்கள் ஏற்றுக்கொண்டு கண்டைநேர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.

வாகனத்தை மதுரையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது திம்பம் மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்டபோது லாரி பிரேக் பழுதடைந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி