57 வயது முதியவரை காதல் வலையில் சிக்க வைத்த சர்ச்சை பெண் : ‘ஒண்ணா’ இருக்கலாம் என அழைத்து நூதன மோசடி!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2024, 10:39 am
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது57). பி.ஏ. பட்டதாரி. தற்போது தேனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற முத்துராமலிங்கம் 2 – வது திருமணம் செய்ய ஆன்லைன் மூலம் திருமண தகவலை தேடி உள்ளார்.
அப்போது கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த விஸ்வதர்சினி (வயது47) என்ற பெண் முத்துராமலிங்கத்தை போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
தானும் கணவரை விட்டு மகனுடன் வசிப்பதால், 2 – வது திருமணம் செய்ய விரும்புவதாகவும், முத்துராமலிங்கத்தை திருமணம் செய்ய சம்மதிப்பதாகவும் கூறி உள்ளார்.
இதனால் 2 பேரும் அடிக்கடி போனில் பேசி உள்ளனர்.நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர். இந்தநிலையில் விஸ்வதர்சினி, தன்னுடைய மகன் ஜெர்மனியில் படிப்பதாகவும், படிப்பு செலவுக்கு ரூ.18 லட்சம் ஆகும் என்றும், தன்னிடம் ரூ.10 லட்சம் மட்டும் இருப்பதால் ரூ.8 லட்சத்தை முத்துராமலிங்கத்திடம் கேட்டு உள்ளார்.
தன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்று கூறி ரூ.2 லட்சத்தை முத்துராமலிங்கம் கொடுத்து உள்ளார். அதன் பின்னர் விஸ்வதர்சினி தொடர்பு கொள்ளவில்லை.
தன்னை ஏமாற்றியது குறித்து முத்துராமலிங்கம் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விஸ்வதர்சினி மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட விஸ்வதர்சினி மீது ஏற்கனவே நடிகர் விஷால் குறித்து யூடியூபில் விமர்சித்ததாக சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இது தவிர துடியலூர் போலீசாரை மிரட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குண்டர் சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜாமீனில் விடுதலையான விஸ்வதர்சினி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பணம் மோசடி செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.