வழக்கறிஞர்கள் வராததால் வாதாடிய குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி : நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 2:26 pm

வழக்கறிஞர்கள் வராததால் வாதாடிய குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி : நீதிமன்றத்தில் பரபரப்பு!!

கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பினர் வாதாடுவதற்கு தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்தனர். இந்நிலையில் தனது மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமும், அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பு வாதாடுவதற்கு தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்தனர்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கம் போல் வாதாடுவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி பூர்ணிமா இன்று வாதாடவில்லை என்றால் நீதிமன்றமே மூத்த வழக்கறிஞரை நியமித்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சார்பில் வாதாட நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜரானார். அப்போது உங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க பலமுறை கால அவகாசம் கொடுத்தும் இதுவரை வாதாட முன் வரவில்லை. உங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறீர்கள் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் நீதிபதி பூர்ணிமா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

பின்னர், இன்று உங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது என் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் இன்று ஆஜராகவில்லை என்றும் நானே வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ராஜேஷ்தாசை வாதாட வருமாறு அனுமதி கொடுத்தார் இதனைத்தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சுமார் ஒரு மணி நேரம் வாதாடி தனது தரப்பு விளக்கத்தை நீதிபதியிடம் முன் வைத்தார்.

இதனைத்தொடர்ந்து வரும் 7ஆம் தேதி வரை நாள்தோறும் உணவு இடைவேளைக்கு பிறகு வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு அனுமதி அளித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா அனுமதியளித்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.

கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரே வழக்கறிஞர்கள் துணையின்றி நீதிபதி முன்னிலையில் நேரடியாக வாதாடி தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 676

    0

    0