அமைச்சர்கள் மீது அளித்துள்ள ஊழல் புகார் : பொய் என நிரூபிக்க நான் ரெடி… முதல்ல முழுசா தெரிஞ்சுட்டு பேசுங்க… அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரிப்ளை!!
Author: Udayachandran RadhaKrishnan5 June 2022, 3:35 pm
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சிறுபான்மை நலன் துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் ஏராளமான அதிகாரிகளின் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் கூறுகையில், இந்த நாட்டில் எங்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தாதவர்களே கிடையாது. பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் இவர்கள் மீதும் ஊழல் பட்டியல் கூறினார்கள் ஆனால் எந்த ஊழல் பட்டியலும் நிரூபிக்க முடியவில்லை.
கலைஞரின் தொண்டர்கள் நாங்கள் எங்கள் மீது கூறும் அனைத்து பொய் புகார்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம் ஆனால் புகார் என்று சொன்னால் விசாரிக்க கூட தடை விதிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கடந்த அமைச்சர்கள், அதை கூட தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.
அண்ணாமலை முழுமையாக அனைத்து விசயங்களையும் பேசட்டும் அதன் பின் அவர்களுக்கு பதில் அளிப்போம். மற்ற மாநிலங்களில் நடக்கும் சில விசயங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் இது தான் கடந்த கால வரலாறு..
கடந்த ஆட்சியில் வெளிநாட்டில் இருப்பவர்கள் சடலம் வருவதற்கு ஆண்டு கணக்கானது ஆனால் தற்போது 10 நாட்களில் கூட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நலவாரியம் அமைந்தவுடன் இதை விட வேகமாக செயல்பட முடியும், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மத்திய அரசு குறிப்பிட்ட அளவு சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க இலக்கை குறிப்பிட்டுள்ளது. இதனை அதிகரிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசு வழங்கவில்லை என்றால் உதவித்தொகை தமிழக அரசே வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.