ஊராட்சிமன்ற தலைவரை செருப்பால் அடிக்க முயன்ற கவுன்சிலர் ; கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan16 August 2023, 11:15 am
சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவரை கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 9வது வார்டு கவுன்சிலர் குருநாதன் மற்றும் அவரது மனைவி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கோபத்தின் உச்சிக்கு சென்ற கவுன்சிலர் குருநாதனின் மனைவி ஊராட்சிமன்ற தலைவரின் உறவினரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. போலீசார் முன்னிலையிலேயே, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை வார்டு கவுன்சிலர் குருநாதன், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிராம சபை கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து குருநாதனின் ஆதரவாளர்கள் கேளம்பாக்கம் – வண்டலூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, செருப்பால் அடிக்க முயன்றதாக கவுன்சிலர் மீது ஊராட்சிமன்ற தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ஊராட்சிமன்ற தலைவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0