பெட்டிக்கடையில் கள்ளநோட்டு : விசாரணையில் சிக்கிய 5 பேர்… ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!!
Author: Udayachandran RadhaKrishnan30 ஜூலை 2022, 1:38 மணி
திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில்விட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கடைவீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் பொருட்களை வாங்குவதற்காக ஒரு நபர் 500 ரூபாயை கொடுத்துள்ளார்.
இதனை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பதை அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கடைக்காரர் மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சவுரி ராஜ் மகன் குணா (வயது 24) என தெரியவந்தது.
போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வால்மால்பாளையம் மேலூரில் வசித்து வரும் தர்மராஜ் என்பவரது, வீட்டை வாடகைக்கு எடுத்து அவரையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொண்டு கள்ள நோட்டு தயாரித்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தர்மராஜ் வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த தர்மராஜை கைது செய்த போலீசார், கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளையும், கள்ள நோட்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த காகிதங்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட 1 லட்சத்து 38 ஆயிரம் 500 ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
மேலும், கள்ள நோட்டை சமயபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட்ட புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா சத்தியமங்கலம் அருகே உள்ள மேலூர் கள்ளர் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் மதன்குமார் (வயது 21),ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 40), திருச்சி உறையூரை சேர்ந்த மற்றொரு அருண்குமார் (வயது 24) ஆகியோரையும் கைது செய்தனர்.
0
0