இரண்டு துண்டான உடல்.. பதுங்கியிருந்த கும்பல்.. லிவ் இன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது எப்படி?
Author: Hariharasudhan18 March 2025, 8:53 am
கிருஷ்ணகிரியில் லிவ் இன் வாழ்க்கையில் இருந்தவரை கணவருடன் சேர்ந்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில், இளைஞர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். மேலும், அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. எனவே, அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் எனக் கருதிய போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவரது தலை, கை, கழுத்துப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இது கொலையாக இருக்கலாம் எனக் கருதி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
இதன்படி, கொலை செய்யப்பட்டுக் கிடந்தவரின் சட்டைப் பையில் பஸ் டிக்கெட் ஒன்று இருந்துள்ளது. மேலும், அந்த டிக்கெட் ஓசூரிலிருந்து பெங்களூருக்கு எடுக்கப்பட்டு இருந்துள்ளது. எனவே, தனிப்படை போலீசார் உடனே ஓசூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, ஓசூர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். 70 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த நிலையில், ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் கொலை செய்யப்பட்டவரும், அவருடன் ஒரு பெண்ணும் ஏறுவது பதிவாகி இருந்தது.
இதனையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படங்களை, தமிழக எல்லையோர மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் பெங்களூரு போலீசார் அனுப்பி வைத்ததில் துப்பு கிடைத்துள்ளது. இதன்படி, கொலை செய்யப்பட்டவர் லோகநாதன் எனபது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், கிரானைட் பாலீஸ் செய்யும் வேலை செய்து வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அதோடு, அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் ஏற்கனவே சூளகிரி போலீஸில் புகார் செய்திருந்தனர்.
மேலும், லோகநாதன் குடும்பத்தில் விசாரித்தபோது, லோகநாதனுக்கு ஓசூரில் பூ வியாபாரம் செய்யும் சத்யா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்த போலீசாரின் விசாரணையில், சத்யாவிற்கு ஏற்கனவே வரதராஜன் என்பவருடன் திருமணமாகி இருந்ததும், கணவரை வைத்துக்கொண்டே லோகநாதனுடன் நான்கு ஆண்டுகளாக சத்யா லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், சத்யாவிற்குத் திருமணமான விவகாரம் தெரிய வந்தவுடன், இது குறித்து சத்யாவுடன் லோகநாதன் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும், சத்யாவிற்கும், வரதராஜனுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் இரண்டு பேருடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சத்யா வாழ்ந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்யும் விஜய்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!
இதன்படி, லோகநாதனுடன் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார். அதோடு, இப்பிரச்னை பெரிதானவுடன் போலீஸ் நிலையம் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி லோகநாதனிடம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் சத்யா திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று பேசி முடித்துள்ளனர் போலீசார்.
இதனையடுத்து, லோகநாதனை சத்யா வாடகைக்கு வாழ்ந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு ஏற்கனவே சத்யாவின் கணவர் வரதராஜன் தனது கூட்டாளியுடன் பதுங்கி இருந்துள்ளார். அப்போது, லோகநாதன் வந்ததும் அவரை அடித்துக் கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் தூக்கிப்போட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.