பழகிய பழக்கத்துக்காக செய்த காரியம்.. திருப்பிச் செய்த எதிர்பாரா சம்பவம்!

Author: Hariharasudhan
13 March 2025, 4:54 pm

சென்னையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை, எண்ணூர் முகத்துவாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் – சரண்யா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, விபத்து ஒன்றில் சதீஷ் இறந்துவிட்டார். இதனையடுத்து, விபத்துக் காப்பீட்டில் வந்த தொகையை வைத்து, சரண்யா தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இதைத்தவிர, குடும்பச் செலவுக்காக துணி வியாபாரமும் செய்து வந்துள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் வசித்து வந்த காந்திகுமார் (35) – சத்தியராணி (33) தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தின் அடிப்படையில், சரண்யாவிடமிருந்து சத்தியராணி கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், இந்தப் பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். சத்தியராணியிடம் பணம் தராததால், அவரது கணவர் காந்திகுமாரிடம் சென்று சரண்யா, தன்னுடைய பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், தான் தந்துவிடுவதாக கூறியுள்ளார்.

Online Threatening

இதனையடுத்து, சரண்யாவுக்கு வீடியோ கால் செய்து பேசி வந்த காந்திகுமாரின் போக்கில் வித்தியாசம் தெரியவும், சுதாரித்துக் கொண்ட சரண்யா, “இனிமேல் எனக்கு அடிக்கடி போன் செய்ய வேண்டாம், பணத்தை மட்டும் கொடுத்துவிடுங்கள். பணத்தை நீங்கள் தராவிட்டால் போலீசில் புகார் செய்வேன்” எனக் கடுமையாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரூட் மாறுகிறதா ’ரூ’? அண்ணாமலை கண்டனமும் – அரசு விளக்கமும்!

அதற்கு காந்திகுமார், ஏற்கனவே சரண்யாவுடன் வீடியோ காலில் பேசிய ஸ்கிரின்ஷாட்களை காட்டி, இதனை சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, நம் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன் எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா, எண்ணூர் மகளிர் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காந்திகுமார், சத்தியராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். தற்போது அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • Daniel on Marmar movie மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!
  • Leave a Reply