தானியங்கி மதுபான விற்பனைக்கு நீதிமன்றம் அனுமதி : தடையை தள்ளுபடி செய்ததால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி!!
Author: Udayachandran RadhaKrishnan4 May 2023, 2:35 pm
தமிழகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்கப்படும் திட்டத்தை சென்னையில் ஒரு சில ஷாப்பிங் மால்களில் மட்டும் சோதனை அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இது ஏற்கனவே விற்கப்படும் மதுபானகடைகளில் மட்டுமே செயல்படும் எனவும், மதுபான கடைகள் இயங்கும் நேரத்தில் மட்டுமே இயங்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும், சிறுவர்கள் முதல் அனைவரும் எளிதாக மதுவாங்குவ்து சுலபமாகிவிடும் என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.
இந்த நிலையில், தானியங்கி மதுபான விற்பனை மூலம் எளிதில் மதுபானம் மாணவர்களுக்கு கிடைத்துவிடும் உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, தானியங்கி மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், இது ஏற்கனவே இருக்கும் மதுபான கடைகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் எனவும், இதில் மதுபானங்கள் வாங்கும் அனைவரும் கண்காணிக்கப்படுவர் என்றும், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனை அடுத்து, தானியங்கி மதுபான விற்பனையை தடை செய்யும் பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.