காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கிய பசு : சட்டவிரோதமாக வெடி வைத்து வேட்டையாட முயற்சி செய்த முதியவர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2022, 4:20 pm
கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுவுக்கு வாய் கிழிந்ததால் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் காட்டுசெல்லூர் இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 33). இவருக்கு சொந்தமான பசுமாடு அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்மயில் என்பவரது கரும்பு நிலத்தின் வரப்பில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது வரப்பில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிமருந்தை கடித்ததில் பசு மாட்டின் வாய் கிழிந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், மேமாலூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி(வயது 61) என்பவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேல்மயில் என்பவரது விவசாய வரப்பில் அவருக்கு தெரியப்படுத்தாமல் வெடிமருந்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணையில் செய்ததில் குழந்தைசாமி காட்டுப்பன்றிகளை வெடி வைத்து பிடித்து அதன் இறைச்சியை விற்பனை செய்வதே வழக்கமாக வைத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து குழந்தைசாமியை கைது செய்த ரிஷிவந்தியம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான் வேட்டையாடிய வழக்கில் ரிஷிவந்தியம் போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டவர் இந்த குழந்தைசாமி என்பது குறிப்பிடத்தக்கது. வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மாட்டின் மதிப்பு சுமார் 40ஆயிரம் ஆகும்.