காஞ்சி மாநகராட்சியின் அலட்சியம்…பசுக்களின் உயிர்களை பலி வாங்கும் மின்சாரம்: துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி பசுமாடு..!!

Author: Rajesh
5 May 2022, 3:02 pm

காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்விளக்கிற்கு செல்லும் வயரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்பந்தம் விடப்பட்டது. மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகளுக்கு செல்லும் மின்வயர்கள் தகுந்த பாதுகாப்பின்றி வெட்டவெளியில் உள்ளது. அவ்வாறு பாதுகாப்பின்றி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மின்வயர்களால் அவ்வப்போது மக்கள் பாதிப்படைகிறார்கள்.

இந்நிலையில் மாநகராட்சியின் சார்பில் கிழக்கு ராஜவீதி பகுதியில் அமைப்பட்டுள்ள தெருமின் விளக்கு கம்பத்திலிருந்து வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருந்த மின்வயரில் இருந்து மின்சாரம் கசிந்து அந்த வழியாக சென்ற கர்ப்பிணி பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதால் அந்த கர்ப்பிணி பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பசுமாடு துடிதுடித்து இறந்ததை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 50 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு இறந்ததை அறிந்த மாட்டின் உரிமையாளர் விஜயகுமார் கதறி அழுதார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை தெரு பகுதியில் தெருமின் விளக்கு மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு பசு மாடு துடிதுடித்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 980

    0

    0