ஆளில்லாத நடுக்காட்டில் பிரசவ வலியால் துடித்த பசு : அனுபவமின்றி பிரசவம் பார்த்த பட்டதாரி இளம் பெண்.. வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan23 February 2022, 3:51 pm
திண்டுக்கல் : ஆளில்லாத நடுக்காட்டில் பசுவுக்கு தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த எம்பிஏ பட்டதாரி பெண் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளைய கவுண்டன் ஊரைச் சேர்ந்த தண்டபாணி சண்முகவள்ளி தம்பதிகளின் இருபத்தி மூன்று வயது மகள் சுதர்சனா. எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் வங்கியில் துணை மேலாளராக பணி கிடைத்துள்ள நிலையில் தனது வீட்டில் இருக்கும் பசுமாட்டின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பசுமாட்டை பிடித்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுவது சுதர்சனாவின் வழக்கம்.
இந்நிலையில் இன்று காட்டுப் பகுதிக்கு கர்ப்பமடைந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற பொழுது திடீரென பசுமாடு சுருண்டு படுத்தது. அதற்கு பிரசவ வலி என அறிந்த சுதர்சனா தனது தாய் தந்தையருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் பசுமாடு துடிப்பதை பார்த்த பதறிய சுதர்சனா யாருக்கும் காத்திருக்காமல் பசுமாட்டிற்கு தானே பிரசவம் பார்த்தார். வயிற்றில் இருந்து வெளியே வந்த கன்றுக்குட்டியின் கால்களை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தார்.
பசு மாட்டிற்கு பட்டதாரிப் பெண் பயமில்லாமல் துணிச்சலாக பிரசவம் பார்த்தது அப்பகுதியினரிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.