ஓபிஎஸ் மகனுக்கு ஓரு நியாயம்.. ராகுல் காந்திக்கு ஒரு நியாயமா..? மத்திய அரசின் முடிவு என்ன..? முத்தரசன் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 1:26 pm

ரவீந்திரநாத் பிரச்சனையில் முப்பது நாள் அவகாசத்தை ஒன்றிய அரசு ஏற்கப் போகிறதா..? அல்லது நிராகரிக்க போகிறதா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசியதாவது :- தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்போடு சேர்த்து 30 நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்போது ஒன்றிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. இந்த பிரச்சனையில் எத்தகைய அணுகுமுறையை ஒன்றிய அரசு மேற்கொள்ளப் போகிறது.

பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்திக்கு கீழ்நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்தது. தண்டனை விதித்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் நீதிமன்றம் வழங்கியது. ஆனால், அடுத்த நாளே அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு நாடாளுமன்ற செயலாளர் கடிதம் அனுப்பினார். அந்த தொகுதி காலியாக இருக்கிறது என்று அறிவித்தார். தொடர்ந்து, அவர் குடியிருந்த வீட்டை காலி செய்ய கூறினார்கள். ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட 30 நாள் அவகாசத்தை ஏன் ஒன்றிய அரசு பின்பற்றவில்லை.

ரவீந்திரநாத் பிரச்சனையில் ஒன்றிய அரசு என்ன அணுகுமுறையை மேற்கொள்ளப் போகிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. இந்த முப்பது நாள் அவகாசத்தை ஒன்றிய அரசு ஏற்கப் போகிறதா ?? அல்லது நிராகரிக்கப் போகிறதா ?? நீதிமன்ற அவகாசத்தை ஒன்றிய அரசு ஏற்க போகிறது என்றால், ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறு. ஒன்றிய அரசாங்கம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையின் போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இன்று வரை அதனை தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தின் பொருளாதார நிலைமை சீராக வந்து கொண்டுக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் என தமிழக முதல்வரும் கூறி வருகிறார்.

அண்ணாமலை உள்ள கட்சியின் பிரதமரின் நிதி ஆலோசகர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கூறி வருகிறார். பஞ்சாப் போன்ற ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். எனவே, பல ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதீர்கள் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கூறியுள்ளதற்கு அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கருத்து கூற வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் மாநில அரசாங்கத்திற்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. கார்ப்பரேஷன் போல் செயல்படுகிறது, என கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்