பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களா…? தமிழக அரசின் நடவடிக்கைக்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் வேதனை!!

Author: Babu Lakshmanan
29 June 2022, 8:07 pm

பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது வேதனை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கின்றது. உள்நாட்டில் நடப்பது தெரியாமல் வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை என பேசிவருகிறார். பாஜக அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமையை மிதிக்கிறது எனவே ஜனநாயகம் குறித்து மோடிக்கு பேச தகுதி இல்லை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழக மக்களுக்கு வேதனைகள் தான். பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் வேதனை நடக்கபோகிறதோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

ஜனநாயகத்திற்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கைது செய்யும் அவலம் தொடர்கிறது. ஐவுளி தொழிலை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது தான் மோடி அரசின் சாதனை. ஜனநாயத்திற்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி வருவது பாராட்டுதலுக்குரியது, இதுபோன்று குடும்பதலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்சன் திட்டம் ஆகியவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும், பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது வேதனை அளிக்கிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினையை பற்றி அதிகமாக பேச தேவையில்லை. ஒற்றைத்தலைமை குறித்து சண்டைபோடும் அதிமுக மோடி அரசின் கீழ் நடைபெறும் மக்கள் விரோத திட்டங்களை பற்றி ஏன் எதிர்த்து பேசுவதில்லை. பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களுக்கு வெண்சாமரம் வீசி அதிமுகவினர் வரவேற்கின்றனர்.

தமிழகத்தில் பாஜகவிற்கு 25 சீட் கிடைக்கும் என்ற அண்ணாமலை பேசுவது பொய்யான நம்பிக்கை பாஜக – அதிமுக கூட்டணிக்கு அடுத்தடுத்து தோல்வி தான் கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவுள்ள கட்சியான பாஜக கட்சி தமிழகத்தில் மட்டும் எப்படி வெற்றிபெறும், என கேள்வி எழுப்பினார்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…