பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடா..? தமிழக காவல்துறையின் செயல்பாடு கவலையளிக்கிறது ; பாலகிருஷ்ணன் வேதனை

Author: Babu Lakshmanan
3 December 2022, 2:37 pm

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை காரணமாக உயிரிழந்த 17 வயது சிறுமி வழக்கு தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தமிழகத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்உணர்வுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

பெரம்பலூர் மாணவி விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகம் உட்பட இந்தியாவில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் சமுதாயம் சீரழிவை சந்திக்கும் என குறிப்பிட்டார்.

தமிழக ஆளுநருடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாலகிருஷ்ணன், “அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு என மத்திய அரசின் உள்துறை எந்த விதமான குறையும் கூறியதாக தெரியவில்லை. எனவே அண்ணாமலை அரசியலுக்காக இதை பேசி வருகிறார்,” என பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!