கோவில் திருவிழாவில் கிரேன் விழுந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி : அரசு அதிகாரிகள்தான் காரணம் என குற்றச்சாட்டு!!!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2023, 10:00 am
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து (வயது 42 ), கீழ்ஆவதம் பூபாலன் ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்த தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்த சம்பவம் சாலை சரியில்லாத காரணத்தால் நடந்துள்ளது.
திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். இது போன்ற விழாக்களுக்கு மருத்துவர் ஆம்புலன்ஸ் போன்ற முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.