நொறுங்கிய AUDI கார்… சாலை விபத்தில் பிரபல இசையமைப்பாளர் பலி… அதிர்ச்சியில் திரையுலகம்!!!
Author: Udayachandran RadhaKrishnan4 September 2023, 9:00 am
சாலை விபத்தில் பிரபல இசையமைப்பாளர் பலி… அதிர்ச்சியில் திரையுலகம்!!!
சென்னையைச் சேர்ந்த நண்பர்களான தசி என்கிற சிவக்குமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ் என நான்கு பேரும் நாகராஜன் ரியல் எஸ்டேட் பிசினஸ் சம்பந்தமாக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை பகுதியில் பைபாஸில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆடி காரின் முன்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவற்றில் மோதியது.
இந்த விபத்தில், திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வரும் தசி என்கிற சிவக்குமார் (வயது 49) சென்னையை பூர்வீகமாக கொண்ட ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் அடியான் (வயது 50)என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி கிராமத்தில் பிறந்தவர் சிவகுமார். அவருடைய தந்தை பாரதிமோகன். யார் குற்றவாளி, அத்தான் என்ற இரண்டு திரைப்படங்களைத் தயாரித்து அதற்கு பாடல்களும் எழுதியவர். தனது தந்தையுடன் ஸ்டுடியோக்களுக்கு சென்று வந்த சிவகுமாருக்கு திரையுலகில் ஈர்ப்பு வந்தது. அதனையடுத்து திரையுலகில் பின்னணி இசைப்பிரிவில் முதலாக பணிக்கு சேர்ந்து சிறிது சிறிதாக முன்னேறினார்.
மலையாளப் படங்களில் பணியாற்றிய போது குட்டி கிருஷ்ணன் என்ற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமானார். அவரது பரிந்துரையில் சிவகுமாருக்கு ஒரு படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. தந்த்ரா என்ற அந்த படத்தின் பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மலையாள திரை உலகில் அவருக்கு கிடைத்தது. திரை உலகத்திற்காக தனது பெயரை வீ.தஷி என்று மாற்றிக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள தஷி, இதுவரையில் சுமார் 90 புது பாடகர்களையும், 160 பாடலாசிரியர்களையும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 49 வயதான அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
மேலும் ரியல் எஸ்டேட் அதிபராக நாகராஜ் (வயது 50) மற்றும் இயக்குனரான மூவேந்திரன் (வயது 55) பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திலிருந்து உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து,அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்
0
0